மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் புதிய உத்தரவின்படி, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) கட்டமைப்பு வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் எல்பிஜி (LPG) வாடிக்கையாளர்கள் உடனடியாக புதிய எரிவாயு இணைப்புக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் அனைத்து வசதிகள் இருந்தும் பிஎன்ஜி இணைப்புக்கு மாறாத வாடிக்கையாளர்களுக்கு, வரும் ஜூன் 30-ம் தேதியுடன் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பாதுகாப்பான மற்றும் எளிமையான இந்த எரிவாயு முறைக்கு மக்கள் மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசு வழங்கிய மூன்று மாத காலக்கெடு விரைவில் முடிவடைவதால், சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தாமதிக்காமல் பிஎன்ஜி இணைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த புதிய உத்தரவு சிலிண்டர் விநியோக முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், பிஎன்ஜி வசதி இல்லாத பிற பகுதிகளுக்கு வழக்கம்போல எல்பிஜி சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்யப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
