சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்து, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்ட ஒரு பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தலைமை அலுவலகத்தின் எதிரே வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் ‘அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ளநரி’, ‘இன்று அனாதையாக வந்து ஓலமிடும் குடிகார குள்ளநரி’ ஆகிய வாசகங்கள் சிங்கம் மற்றும் குள்ளநரிப் படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
உட்கட்சித் தோல்வி குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் வேளையில், கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரையே குறிவைத்து சொந்தக் கட்சியினரே இத்தகைய சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
