சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ சுரங்கப்பாதையின் மேல் புதிய சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காகச் சாலையின் நடுவே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநரான இப்ராஹிம் (30) என்பவர் அந்தச் வழியாகத் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு கார் அதிவேகமாக வந்ததால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக இப்ராஹிம் தனது காரை திடீரென வலதுபுறமாகத் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த பள்ளத்திற்குள் எதிர்பாராத விதமாகப் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த பாதுகாப்புத் தடுப்புகளில் கார் பலமாக மோதி சிக்கிக் கொண்டதால், பள்ளத்திற்குள் முழுமையாக விழாமல் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் ஓட்டுநர் இப்ராஹிம் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினரும் காவல்துறையினரும் இப்ராஹிமையும் அவரது காரையும் பாதுகாப்பாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
