திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சோளங்குரணி கிராமத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த போத்தி ராஜன் வள்ளியம்மன் திருக்கோவிலுக்குச் செல்ல, கடந்த 21 ஆண்டுகளாகப் பாதை இல்லாமல் தவித்து வந்த பொதுமக்களின் கோரிக்கையை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நிறைவேற்றியுள்ளார். தேர்தல் வாக்குறுதிப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்துத் தந்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் நடத்திய கோவில் திருவிழாவில் அமைச்சர் இன்று நேரில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை போன்ற மாநகரப் பகுதிக்குள்ளேயே 21 வருடங்களாக மக்கள் தங்கள் பாரம்பரிய உரிமைக்காகப் போராட வேண்டிய நிலை இருந்ததைச் சுட்டிக்காட்டி வியப்பு தெரிவித்தார். மேலும், கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் போராடியும் முந்தைய அரசால் மூட முடியாத குவாரியைத் தங்களது அரசு மூடி சாதனை படைத்துள்ளதாகக் கூறி, கடந்த திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அமைச்சரவை கூட்டம் தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், இது வழக்கமாக நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் தான் என்றும், இதில் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் விளக்கினார். மகளிர் உரிமைத் தொகை குறித்து ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னரே அதுகுறித்த விவரங்கள் முழுமையாகத் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரைத் தவிர மற்ற அமைச்சர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்யவோ, சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ போடவோ கூடாது என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தினாரா என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் விரிவான விளக்கமளித்தார். தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பிருந்தே, லஞ்ச ஊழலற்ற மற்றும் தவறு இல்லாத மக்கள் சேவையை மட்டுமே செய்ய வேண்டும் என்று முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். “மக்களே எஜமானர்கள்; மக்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யக்கூடாது” என்பதே முதல்வரின் தாரக மந்திரம் என்று கூறிய அமைச்சர், ஒரு தூய்மையான அரசாங்கத்தை வழங்குவதுதான் முதல்வர் விஜயின் முதன்மை நோக்கம் என்றும், அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த எண்ணங்களின் அடிப்படையிலேயே அவர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார் என்றும் தெரிவித்தார்.
