ஆர்பி உதயகுமார், மூர்த்தி பாணி… மதுரையின் புதிய ‘பவர் செண்டர்’ ஆன சிடிஆர் நிர்மல்குமார்…. தவெகவுக்குள் கிளம்பும் புதிய புயல்…. அலறும் அரசியல் களம்….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

மதுரை அரசியலில் தவிர்க்க முடியாத ஒற்றைப் ‘பவர் செண்டராக’ தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உருவெடுத்து வருவது அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோரும், திமுக ஆட்சியில் அமைச்சர் பி. மூர்த்தியும் மதுரையின் பவர் செண்டர்களாக வலம் வந்தனர். தற்போது தவெக ஆட்சியில் அந்த இடத்தை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் முழுமையாகக் கைப்பற்றியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தவெக 8 இடங்களையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தையும் வென்றுள்ளது.

மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் சிடிஆர் நிர்மல்குமார், மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சி விவகாரங்கள் அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார். மற்றொரு அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் மாவட்ட அரசியலில் பெரிய அளவில் தலையிடாதது, நிர்மல்குமாரின் அதிகாரத்தை மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் கூட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை விட இவரே முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் தவெக எம்எல்ஏக்கள் நடத்தும் அனைத்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும், போஸ்டர் மற்றும் பேனர்களில் தனக்கே முதன்மை இடம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

   

அமைச்சரின் இந்த அதிரடி அதிகாரப் போக்கு தவெக எம்எல்ஏக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கட்சிக்கு வந்து அமைச்சரான ஒருவர், தங்களையே கட்டுப்படுத்த நினைப்பதாக அவர்கள் முணுமுணுத்து வருகின்றனர். இதன் காரணமாக அமைச்சர் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளை எம்எல்ஏக்கள் புறக்கணித்துத் தலைகாட்டாமல் தவிர்த்து வருகின்றனர். இதனிடையே அமைச்சரின் ஆதரவாளர்களும், குறிப்பாக திருப்பரங்குன்றம் மாவட்டச் செயலாளர் மருதுபாண்டியனும் அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டுப் பல்வேறு பலன்களை அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

   

மறுபுறம், அமைச்சருக்கு எதிராகச் செயல்பட வேண்டிய எதிர்க்கட்சிகளும் வியக்கத்தக்க வகையில் அமைதி காத்து வருகின்றன. திமுகவின் முன்னாள் அமைச்சர் மூர்த்தி கட்சிப் போராட்டங்களில் கூட பங்கேற்காமல் சைலண்ட் மோடில் இருக்கிறார். அதிமுகவின் ஆர்பி உதயகுமார் வழக்கமான அரசியல் விமர்சனங்களை முன்வைத்தாலும், சிடிஆர் நிர்மல்குமாரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் இந்த மௌனம் தவெக எம்எல்ஏக்களுக்கே அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், மதுரையில் தனக்கு எதிர்ப்பே இல்லாத தனிப் பெரும்பான்மை பவர் செண்டராக சிடிஆர் நிர்மல்குமாரின் கிராஃப் தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது.