“மின்வாரியத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்”…. 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உடைத்த பகீர் உண்மை…!

By Nanthini on ஆனி 4, 2026

Spread the love

தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், அலுவலகத்தில் ஊழியர்கள் குறைவாக இருந்த சமயத்தைப் பயன்படுத்தி சுமார் 10 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் தொடர்பான மிக முக்கியமான கோப்புகளும், தரவுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்துள்ளனர்.

   

இந்த விவகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “பல ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து கடந்த மாதம் புகார்கள் கிடைத்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை தற்பொழுது போலிசாரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இது குறித்து முழுமையாக இப்போதே பேச முடியாது” என்று தெரிவித்தார்.

   

மேலும், இந்தத் திருட்டுச் சம்பவத்தின் பின்னணி குறித்துப் பேசிய அமைச்சர், எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் யாரும் இவ்வளவு முக்கியமான ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியிருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட டெண்டர்கள் தொடர்பான விவரங்களே இதில் மாயமாகியுள்ளன என்றும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்த இடத்திலும் யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், “மின்வெட்டுப் பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே இந்தத் திருட்டு நாடகம் நடத்தப்படுகிறதா?” என்ற கேள்வியை திட்டவட்டமாக மறுத்தார். மின்தடைக்கும் இந்த ஹார்டு டிஸ்க் திருட்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், காற்றாலைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாகவே ஆங்காங்கே மின்தடைகள் ஏற்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார். தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, கணினிகளில் உள்ள மற்ற தரவுகளைப் பத்திரமாக பேக்-அப் (Back-up) எடுத்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.