தெலுங்கானா மாநிலம் மஞ்சிர்யாலா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான லலிதா என்ற பெண், கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கரீம்நகரில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், அவரைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ள விருப்பமில்லாத குடும்பத்தினர் ஈவிரக்கமற்ற முடிவொன்றை எடுத்தனர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகப் பொய்கூறி அவரை காரில் ஏற்றிய உறவினர்கள், வழியில் காட்டாரம் – மேடாரம் சாலையோர வனப்பகுதியில் உள்ள புதருக்குள் அவரைத் தனியாக தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர்.
அந்த வழியாகச் சென்ற மல்லேஷ் என்பவர், ஆதரவற்ற நிலையில் கிடந்த லலிதாவைக் கண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்து உதவியுள்ளார். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு மகாதேவபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்து லலிதாவின் குடும்பத்தினருக்குக் காவல்துறை தகவல் தெரிவித்தும் அவர்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இதனால், அந்தப் பெண்ணை அனாதையாக விட்டுச் சென்ற உறவினர்கள் மீது அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
