“ஸ்டாலினுக்கு முன்பே தெரிந்த ரகசியம்.. சிக்கிய விஜய்”… தமிழக அரசியலை உலுக்கும் 2,044 கோடி விவகாரம்… தவெக அரசுக்கு விழுந்த ‘மறைமுக’ ஆப்பு…!

By Nanthini on வைகாசி 28, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரம் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக “அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்” என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது வெறும் ரூ.2,044 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், “முழு கடன் தள்ளுபடி எங்கே?” என்று விவசாய சங்கங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன. இந்த நிர்வாக ரீதியான மற்றும் அரசியல் ரீதியான சவால்களுக்குப் பின்னால், நபார்டு (NABARD) வங்கியின் கடுமையான புதிய நிபந்தனைகளே முக்கியக் காரணமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

தமிழகத்தில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் நிதி முதுகெலும்பாக விளங்குவது நபார்டு வங்கிதான். கடந்த காலத்தில் கூட்டுறவு வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கியபோது, மத்திய அரசு வைத்யநாதன் கமிட்டி பரிந்துரையின்படி மறுசீரமைப்பு நிதி வழங்கியது. ஆனால், இதற்காக மாநில அரசுகள் நபார்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக கட்டுப்பாடில்லாமல் கடன் தள்ளுபடி அறிவிக்கக்கூடாது என்பதே அதன் முக்கிய சாராம்சம். அன்று ஜெயலலிதா இதனை எதிர்த்த நிலையில், பின்னர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

   

கடந்த காலங்களில் தமிழகத்தில் பெரும் தொகையிலான கடன் தள்ளுபடிகள் அரங்கேறியுள்ளன. 2006-ல் கருணாநிதி அரசு ரூ.7,000 கோடியும், 2016-ல் ஜெயலலிதா அரசு ரூ.5,318 கோடியும், 2021 தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி அரசு ரூ.12,110 கோடியும் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கடன் சுமை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தலைமேல் விழுந்தது. வழக்கமாக, அரசு கடன் தள்ளுபடி அறிவித்தவுடன் அந்தத் தொகையை உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குவதில்லை; மாறாக, பல ஆண்டுகள் தவணை முறையிலேயே வழங்கும். இதனால் வங்கிகளுக்கு வட்டி இழப்பு ஏற்பட்டு, கூட்டுறவு வங்கி அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தன.

 

இந்த நிதிச் சீர்குலைவைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் நபார்டு வங்கி புதிய கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்தது. அதன்படி, “நபார்டின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் தன்னிச்சையாக கடன் தள்ளுபடி அறிவிக்கக்கூடாது; அவ்வாறு அறிவித்தாலும், அடுத்த 60 நாட்களுக்குள் முழு தொகையையும் மாநில அரசு கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்திவிட வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி விதிமுறைதான் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைப் பெரும் முட்டுக்கட்டையில் நிறுத்தியுள்ளது. தற்போதைய தமிழக அரசின் நிதிநிலை சூழலில், பல ஆயிரம் கோடி ரூபாயை வெறும் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாகவே, தவெக அரசு தற்போது முழுமையாக இல்லாமல் பகுதி அளவிலான தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் வாக்குறுதியை நம்பிய விவசாயிகளுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளதால் தவெக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை எழுந்துள்ளது. அதே நேரத்தில், நபார்டு வங்கியின் இந்த புதிய கெடுபிடிகள் குறித்து முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்திருந்ததால்தான், கடந்த பொதுத் தேர்தல் அறிக்கையில் திமுக முழுமையான கடன் தள்ளுபடி வாக்குறுதியை சாதுரியமாகத் தவிர்த்தது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியிருப்பினும், இந்த நிதி நெருக்கடியையும் விவசாயிகளின் கோரிக்கையையும் தவெக அரசு எவ்வாறு சமளிக்கப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.