சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான விருது பட்டியல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகளுக்கான விருதுகளை சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக அரசு அறிவித்துள்ளது. ரசிகர்களால் மிக நல்ல படங்கள் என்று வரவேற்கப்பட்ட பல படங்கள் இதில் இல்லை. தமிழ் சினிமாவில் திமுக ஆதரவாளர்களுக்கு மறைமுகமாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் உள்ளது.
இந்நிலையில் அறம் படத்தின் இயக்குனர் நயினார் கோபி தமிழக அரசின் திரைப்பட விருதுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குனர் விருதை எனக்கு அறிவித்து இருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டு இருப்பேன்.
உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தனது சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும். உரிமை கோருபவர்களை தன் அரசுக்கு எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசம் ஆகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தும் போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது என்று அந்த பதிவில் இயக்குனர் நயினார் கோபி குறிப்பிட்டுள்ளார்.
