மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மு.சலீமை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படாமல் முடங்கியுள்ளதாகவும், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் பணப்புழக்கம் மற்றும் விதிமீறல்கள் அதிகளவில் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். தவெக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அச்சமின்றி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக மக்கள் கூறுவதாகவும், கம்யூனிஸ்டுகள் மட்டுமே பணம் தராமல் நேர்மையாக பிரச்சாரம் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழக முதல்வர் விஜய் ‘தூய சக்தி’ என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் நிலைக்கு நேர்மாறாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகச் சாடிய சண்முகம், இது அக்கட்சியின் தூய சக்தி அடையாளத்தையே அழித்து ஒழிக்கிறது என்றும் இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தேர்தல் களம் ஆதரவாக இல்லாததாலும் கடும் போட்டி நிலவுவதாலும் தவெகவினர் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார். தவெகவின் நெறிமுறையற்ற செயலால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில், பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்த வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் மோசடி ஆணையராக ஞானேஷ்குமார் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதாகக் கூறி தேர்தல் ஆணையம் மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகக் குற்றம்சாட்டினார். ஒரேயடியாக தாத்தா விவரங்களைக் கேட்பதும், பிறகு தந்தை பெயர் கூட தேவையில்லை எனக் கூறுவதும் தவறான அணுகுமுறை என்றும், தகுதியான நபர்களை மட்டுமே பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் பாஜக சொல்வது போல் ஆட்சி மாற்றம் வர எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் பெ.சண்முகம் தனது பேட்டியில் உறுதியாகத் தெரிவித்தார்.
