“என்ன சிஎம் சார்…. கையோட தண்ணீர தூக்கிட்டா வரப்போறீங்க?”…. விஜய்யை வறுத்தெடுத்த பெ.சண்முகம்…. அரசியலில் கிளம்பிய புதிய புயல்….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத் தலைவரும், தமிழக அரசியல் களம் உற்றுநோக்கும் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 3-ஆம் தேதி காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பெங்களூர் செல்லவுள்ளார். இந்தச் சந்திப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உறுதி செய்துள்ள நிலையில், இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய நிலையில், ஆகஸ்ட் மாதம் நெருங்கியும் தண்ணீர் நிலவரம் கேள்விக் குறியாகவே இருப்பதால், டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்கனவே கடும் கவலை நிலவி வருகிறது.

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த கர்நாடக பயணத்திற்கு ஸ்டாலின் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வரிசையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விஜய்யின் பயணத்தை கடுமையாகச் சாடியுள்ளார். “கர்நாடகா சென்று தண்ணீரைத் தூக்கிக்கொண்டா வரப்போகிறீர்கள்? காவிரி மேலாண்மை ஆணையத்திலேயே தண்ணீர் தர முடியாது என்று அம்மாநில அரசு கூறிவிட்ட சூழலில், அங்கு சென்று உங்களால் என்ன செய்துவிட முடியும்?” என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மேலும் பேசிய பெ.சண்முகம், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது எனத் தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அணை கட்ட விடமாட்டோம் என்று சொல்வதற்கோ அல்லது தண்ணீரை கேட்டுப் பெறுவதற்கோ இத்தகைய தனிப்பட்ட பயணம் எந்தவிதத்திலும் தீர்வாகாது என்றும், இதனால் எவ்விதப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். எனவே, தமிழக விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, விஜய் தனது கர்நாடகப் பயணத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

   

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் பாலைவனமாகும் ஆபத்து உருவாகும் என்பதால், தமிழகத்தின் அனுமதியின்றி அங்கு பேச்சுவார்த்தை நடத்துவதே தேவையற்ற ஒன்று என்பதே அரசியல் தலைவர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், விஜய்யின் தரப்பில் இந்தப் பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பெங்களூரில் அவரது வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 3 அன்று நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது.