மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், ஆடம்பர வாழ்க்கை ஆசைக்காகத் தங்கள் ஒரு மாதக் குழந்தையையே பெற்றோர் ரூ.1.20 லட்சத்திற்கு விற்ற திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த இந்த ஜோடி, விலை உயர்ந்த புதிய கைபேசிகள் மற்றும் தங்கச் சங்கிலி வாங்குவதற்காக இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர். செப்டம்பர் 20 அன்று தாய் தாக்கப்பட்டதாகக் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியபோது, இந்தக் குழந்தைக் கடத்தல் மற்றும் விற்பனை விவகாரம் வெளிப்பட்டது.
காவல்துறையின் தீவிர விசாரணையில், அந்தக் குழந்தை ரூ.1.20 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை நான்கு வெவ்வேறு இடைத்தரகர்கள் மூலம் கைமாறி, இறுதியில் 550 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஹைதராபாத்திற்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், குழந்தையைப் பத்திரமாக மீட்டு மகாராஷ்டிராவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், பெற்றோர், போலியான மருத்துவர் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதோடு, குழந்தை விற்ற பணத்தில் வாங்கப்பட்ட கைபேசிகள் மற்றும் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
