திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோவிந்தாபுரத்தை சேர்ந்த சந்தனகுமார் (44) என்பவருடைய மனைவி ஜெயலட்சுமி (38). இவர்கள் கடந்த 15 வருடங்களாக திருப்பூரில் குடியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சந்தன குமாரின் உறவினரான ஒட்டன்சத்திரம் சாலை புதூரை சேர்ந்த காளிமுத்து (29) என்பவர் பனியன் ஆலையில் வேலைக்காக திருப்பூர் வந்துள்ளார். உறவினர் என்பதால் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்த நிலையில் காளிமுத்துவும் அவருடைய வீட்டில் தங்கி வேலைக்குச் சென்றார். காளிமுத்துவுக்கு சந்தனகுமார் மாமா உறவு முறையாகும்.
ஒரே வீட்டில் வசித்ததால் காளிமுத்துவுக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி அறிந்த சந்தனகுமார் மனைவி மற்றும் காளிமுத்துவை கண்டித்த நிலையில் இருவரும் கண்டுகொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சந்தனகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் காளிமுத்து சந்தனகுமாரின் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
இதனிடையே இவர்களின் கள்ளக்காதல் பற்றி அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்த நிலையில் ரயில் தண்டவாளத்திற்குச் சென்று கோவையிலிருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்குச் சென்ற ரயில் முன்பு பாய்ந்தனர். அதில் இருவரும் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
