திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காசியம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளை கிருஷ்ணனின் உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகளை செங்கமருகில் உள்ள பரமனந்தல் கிராமத்தில் உள்ள உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இரண்டு மகள்களும் திருமணத்திற்கு பின்னர் அவர்களுடைய கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில் கிருஷ்ணன் மற்றும் காசியம்மாள் இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இருவருக்கும் உடலில் சில பிரச்சனைகள் இருந்ததால் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று அவர்களுடைய மகள்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தம்பதியினர் தங்களது வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கணவனும் மனைவியும் வீட்டில் இல்லாததை கவனித்த அக்கம் பக்கத்தினர் வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்று இருப்பதாக நினைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை குடியிருப்பில் துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் கிருஷ்ணனின் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கணவன் மனைவி இருவருக்கும் உடலில் ஏற்பட்ட தீர்க்க முடியாத நோய் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
