தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.18 கோடி ஹவாலா பணத்தை கேரள போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். சேலத்தில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, இருக்கைக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக காரில் பயணம் செய்த மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த சவான் ரூபேஷ் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடந்த சில காலமாக சேலத்தில் தங்கி வசித்து வந்த நிலையில், அங்கிருந்து கொச்சிக்கு இந்தப் பணத்தை முறைகேடாகக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அது ஹவாலா பணம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.18 கோடி ரொக்கம் மற்றும் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேல் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் எல்லையோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
