திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கோவிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2015 முதல் 2025 வரை 10 ஆண்டுகளில் இந்த மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. திருப்பதி கோவிலில் நன்கொடையாளர்கள் மற்றும் விஐபி தரிசனத்தின் போது அவர்களுக்கு வழங்கப்படும் பட்டுசால்வைகள் பட்டால் செய்யப்பட்டவை இல்லை என்றும் 100 சதவீதம் பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்டது என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விஆர்எஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் மட்டுமே இந்த பட்டு சால்வைகளை திருமலை கோவிலுக்கு விநியோகம் செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது. இந்த மோசடி மூலம் 54 கோடிக்கு ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய திருப்பதி தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு, கொள்முதல் துறையில் சில முரண்பாடுகள் இருப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. இதை கவனத்தில் கொண்டு விசாரணையை மாநில ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளோம் என்று கூறினார். திருமலை கோவிலில் கலப்பட நெய் நன்கொடை திருட்டு சர்ச்சைகளைத் தொடர்ந்து தற்போது பட்டு சால்வை ஊழலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
