ஒற்றை வீடியோவால் திடீரென சர்ச்சையில் சிக்கிய சின்னக்குயில் சித்ரா.. வரிஞ்சு கட்டிடு வந்த குஷ்பு.. உண்மையில் நடந்தது என்ன..?

By Sumathi

Updated on:

தமிழ் சினிமாவில் சின்னக்குயில் என்று அழைக்கப்படுபவர் சித்ரா. தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். சமீபத்தில் அவர் மீது ஒரு சர்ச்சை எழுந்து, அது வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர்கோவில் திறப்பு விழா நடக்கிறது. அன்றைய தினத்தில், ராமரை மனதார வேண்டி வீடுகளில் விளக்கேற்றி ராமரை வழிபடுங்கள் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் மூலம் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து பிரபல பின்னணி பாடகியாக சித்ராவும் சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

   

அந்த வீடியோவில், ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும் நாளில் நண்பகல் 12.20 மணிக்கு ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம என ராமரின் மந்திரத்தை அனைவரும் உச்சரித்து வழிபடுங்கள் என்று கூறியிருந்தார். மேலும் அன்று மாலை வீடுகளில் அனைத்து பகுதிகளிலும் ஐந்து முக விளக்கேற்றி வைத்து, ராமரை வழிபட்டு அவரது நல்லாசியை பெறுங்கள் என்றும் கூறியிருந்தார்.

சித்ரா வெளியிட்ட இந்த வீடியோவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், சித்ரா கூறிய கருத்துக்கு எதிராக சிலர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். மலையாள பாடகர் சூரஜ் சந்தோஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இன்னும் எத்தனை அடையாளங்கள் இன்னும் அழிக்கப்பட உள்ளனவோ, சித்ரா போன்ற இன்னும் எத்தனை முகங்கள் வெளிவர உள்ளனவோ எனவும் சாடியுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் நடிகை குஷ்பு, பாடகர் வேணுகோபால், பாஜக தலைவர் சுரேந்திரன் போன்றவர்கள் சித்ராவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதுவரை பாடுவது மட்டுமே தனது வாழ்க்கையாக கொண்ட அவர், திடீரென ராமர் கோவில் திறப்பு விழா குறித்தும், பக்தர்கள் வழிபாடு குறித்தும் பேசியது சர்ச்சைக்குரிய விவாதமாக மாறிவிட்டது.

author avatar
Sumathi