முதல்வர் விஜய் தொகுதிக்கே இந்த நிலமையா..? கடந்த 3 நாட்களாக தொடர் மின்வெட்டு… தூக்கத்தை தொலைத்த பெரம்பூர் மக்கள்…!!

By Swetha on ஆனி 7, 2026

Spread the love

தமிழகத்தில் கோடைக் காலத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் வெயில், புழக்கம் மற்றும் கொசுக்கடியால் அவதிப்படும் பொதுமக்கள், மின் வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டாலும் முறையான பதிலோ அல்லது உடனடித் தீர்வுகளோ கிடைப்பதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தொடர் மின் தடையால் கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் தங்களின் தூக்கத்தைத் தொலைத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த மின்வெட்டுப் பிரச்சினையைக் கண்டித்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்கள் நள்ளிரவில் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு கரிகாட்டுக்குப்பம் பகுதி மக்கள் 3 மணி நேர மின்வெட்டை எதிர்த்தும், பொன்னேரி அடுத்த ஆரணி பகுதி மக்கள் 1 மணி நேர மின்வெட்டை எதிர்த்தும் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று, கூடுவாஞ்சேரி பகுதியில் கடந்த 10 நாட்களாக நீடிக்கும் மின்தடையைக் கண்டித்து, சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

   

பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, தமிழக முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியான சென்னை பெரம்பூரில் உள்ள உதயசூரியன் நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாகத் தொடர் மின்வெட்டு நீடித்து வருகிறது. இதனைத் தாங்க முடியாத அப்பகுதி மக்கள் நேற்றிரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். முதல்வரின் தொகுதியிலேயே இந்த நிலைமையா என்று மக்கள் வேதனைப்படும் வேளையில், முதல்வர் விஜய் வசித்து வரும் நீலாங்கரை பகுதியிலும் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வெட்டு ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.