தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில், வெளியிலிருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற மூன்று கட்சிகளும் முதல்வர் விஜய் தலைமையிலான கேபினெட்டில் இணைந்துள்ளன. இந்நிலையில், சட்டமன்றத்தில் “அப்பாவை காணோம்” என முதல்வர் விஜய் செய்த செய்கை மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்வதாகக் கூறி விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் கண்டித்தனர். குறிப்பாக திருமாவளவன், தங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வேண்டாம் என்றும், பவர்ஃபுல்லான வேறு துறை தராவிட்டால் ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும், திருச்சி கிழக்குத் தொகுதி மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்கள் வேண்டும் என்றும் தொடர்ந்து நிபந்தனைகளை விதித்து தவெக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வந்தார்.
திருமாவளவனின் இந்த இரட்டை வேடப் போக்கையும் மிரட்டல் பாணியையும் சகித்துக்கொள்ள முடியாத விஜய்யின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் ஜெகதீஸ் ஆகியோர், வெறும் இரண்டு எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு விசிக தரும் டார்ச்சர்களை ஏற்க வேண்டியதில்லை என்றும், இடைத்தேர்தலை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் விஜய்யிடம் விவாதித்தனர். இதனால் கோபமடைந்த முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை அழைத்து, “அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்” என திருமாவுக்கு எச்சரிக்கை விடுக்க உத்தரவிட்டார். இந்த அதிரடி எச்சரிக்கையால் அதிர்ச்சியடைந்த திருமாவளவன், உடனடியாகப் பின்வாங்கி, டெல்லி பிரதிநிதி நியமனத்தை ஆதரித்துப் பேசியதோடு, தவெக அரசுக்கு தான் எந்த டிமாண்டையும் வைக்கவில்லை என அடுத்தடுத்து ‘பல்டி’ அடித்து விஜய்யை குளிர்விக்கும் முயற்சியில் இறங்கினார்.
மறுபுறம், மதிமுக எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் சொல்லி, இடைத்தேர்தலில் அவர்களை ஜெயிக்க வைப்பதாக விஜய் கூறியதாக வைகோ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சி அமைக்க குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில், வைகோவின் இந்த பேச்சு விஜய்க்கு மேலும் தர்மசங்கடத்தை உண்டாக்கியது. இதனையடுத்து, மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கச் சென்ற அமைச்சர்கள் ஆனந்தும் ஆதவ் அர்ஜுனாவும், விஜய்யின் பலத்த ஆதங்கத்தை வைகோவிடம் நேரடியாகத் தெரிவித்தனர்.
