காங்கிரஸில் உச்சகட்ட மோதல்..! “அச்சமில்லை.. அச்சமில்லை” செல்வப்பெருந்தகையின் அறிக்கைக்கு ‘தீ’ பறக்கும் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி..!!

By Soundarya on மாசி 17, 2026

Spread the love

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணி குறித்த விவாதங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற மகாகவி பாரதியாரின் வீரமிக்க வரிகளைக் குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், கட்சி மேலிடத்தின் நடவடிக்கைகள் அல்லது மாநிலத் தலைமையின் எதிர்ப்புகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்ற மறைமுகச் செய்தியை அவர் தெரிவிப்பதாகக் கருதப்படுகிறது.

திமுக உடனான ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வந்தார். இது கூட்டணிக் கட்டுப்பாட்டை மீறும் செயல் எனக் கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்து மாணிக்கம் தாகூருக்கு எதிராக விரிவான அறிக்கை அளித்தார். செல்வப்பெருந்தகை அளித்த புகாரைத் தொடர்ந்து, “தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” என்றும், “காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குத் திருப்பி அடிக்கவும் தெரியும்” என்றும் அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், “மக்களுக்காகப் பங்கு கேட்டால் அது எப்படிச் சதியாகும்?” என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.