கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதால் காவிரி விவகாரம் மீண்டும் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகாவின் இந்த நடவடிக்கைக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மேகதாது அணைத் திட்டம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் முற்றிலும் எதிரானது என்றும், இது லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால் மத்திய அரசு இப்பரிந்துரையை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் வலியுறுத்தியுள்ளார். இத்திட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தற்போதைய அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு குறித்துத் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையில் முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதி, மாநில உரிமைகளுக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகப் பாராட்டியுள்ளார். அதே வேளையில், “காவிரி உரிமைப் பிரச்சினையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏன் இன்னும் ‘சைலண்ட் மோடில்’ இருக்கிறார்? எப்போதும் கனெக்டிங் காலில் பேசும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் நேரடியாகப் பிரதமர் மோடியிடம் ஏன் இதுவரை கேள்வி எழுப்பவில்லை?” என்று மாணிக்கம் தாகூர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது அரசியல் கடந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமை மற்றும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை என்பதால், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த ஒரு திட்டமும் வரக்கூடாது என்றும், முதலமைச்சர் விஜய்யின் கடிதத்திற்குத் தான் முழு ஆதரவு வழங்குவதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வரும் நிலையில், திமுகவினர் இதற்கு இணையத்தில் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி மாணிக்கம் தாகூர் வீசியுள்ள இந்த ‘டீப் சைலண்ட் மோட்’ விமரிசனம், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசியல் களம் மேலும் சூடாவதற்குக் காரணியாக அமைந்துள்ளது.
