தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்று பணியாற்றி வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் உள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது.
இப்படியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, இபிஎஸ் பேப்பர் படிப்பதில்லை, அரசியலும் தெரிவதில்லை. வாய்க்கு வந்தது போல பேசி வருகின்றார். இபிஎஸ் போல எங்களுக்கு கொச்சையாக பேச தெரியாது. இபிஎஸ் சட்டப்பேரவிலேயே இருப்பதில்லை. காலையில் வருவார் எழுந்து பேச வேண்டும் என்பார். உடனே வெளிநடப்பு செய்து விடுவார். உதய் மின் திட்டம், ஜிஎஸ்டியை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.
ஆனால் இபிஎஸ் அதில் கையெழுத்து போட்டவர். தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்து கொடுத்துவிட்டு அடிமைத்தனம் செய்பவர் எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இன்றைக்கு அதிமுகவின் நிலைமை என்ன என்று அனைவருக்கும் தெரியும். ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏரி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைக்கிறார். பொறுமையாக, தரக்குறைவாக, கொச்சைப்படுத்தி பேசி வருகின்றார். இபிஎஸ் மூன்றாம் தர அரசியல் செய்கின்றார் என செல்வப் பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.
