கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் சர்வதேச அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு, ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவுக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த அனுமதியை மீண்டும் நீட்டிக்க வாய்ப்பில்லை என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், இந்திய எரிசக்தி துறையில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவால், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்களை உண்டாக்கக்கூடும் என்பதால், இந்தியப் பொருளாதாரத்திலும் எரிபொருள் விலையிலும் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
