கோவை தெற்கு தொகுதி திமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக் முறைகேடு, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் மோசடி மற்றும் அரசு தொடர்பான வழக்குகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அண்மையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் பரபரப்பு அடங்குவதற்குள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி தரப்பால் பெரும் தேர்தல் முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதிர்ச்சி புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் தெரிவிக்கையில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ஜனநாயக விரோதச் செயல் தடையின்றி நடைபெற்றதாகவும், அதைத் தடுக்காமல் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் வேடிக்கை பார்த்ததாகவும் குற்றம் சாட்டினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சி தேர்தல் பிரிவில் பெறப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்தபோது, கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 48 புகார்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. ஆனால், அவற்றில் இரண்டு புகார்களுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கையும் , ஒரு புகாருக்கு சி.எஸ்.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்குத் தலா 5,000 ரூபாய் பணமும், 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்களும் கொடுக்கப்பட்டதாகக் கூறிய ஈஸ்வரன், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலுமே கரூரைச் சேர்ந்த நபர்களே குற்றவாளிகளாகப் சேர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். தேர்தல் அதிகாரிகளுக்குக் கிடைத்த 45 புகார்களில் “எந்தக் குற்றமும் நடக்கவில்லை” எனப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மட்டும் இவை பதிவாகியுள்ளதால், இது தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும் அவர் ஆதாரப்பூர்வமாகக் குற்றம் சுமத்தினார்.
தேர்தலில் எத்தகைய முறைகேடுகளைச் செய்தாவது வெற்றி பெற்றுவிட்டால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்ற வேட்பாளர்களின் ஆணவப் போக்கை உடைக்க வேண்டியது அவசியமாகும். எனவே, ஜனநாயகப்பூர்வமான தேர்தல் எதிர்காலத்தில் நடைபெற வேண்டுமானால், இந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு விசாரணை ஆணையம் அமைத்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி உள்ளிட்ட வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
