தமிழ் சினிமாவில் எண்பது காலகட்டத்தில் மனோரமாவுக்கு இணையாக காமெடியில் கலக்கியவர் தான் நடிகை பிந்துகோஷ். ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக பிரபு நடித்த கோழி கூவுது என்ற திரைப்படத்தில் ஆட்டம் பாட்டம் கூத்து என்று இவர் பட்டையை கிளப்பி இருப்பார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. இப்படியான நிலையில் 75 வயதை கடந்துள்ள இவருக்கு பல நோய்கள் இருப்பதால் வீல்சேரில் அமர்ந்து தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார். தன் அன்றாட வாழ்வில் படும் கஷ்டங்கள் குறித்து இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், இருக்கிறதா போற தானே எனக்கு தெரியல. உடம்புல அவ்வளவு ப்ராப்ளம் இருக்கு. நடக்கக்கூட ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். சுகர், பிபி எல்லாமே இருக்கு. அதுமட்டுமல்லாமல் ஹார்ட் சர்ஜரி பண்ணாங்க. முட்டி வலி கூட இருக்கு. இந்த நிலைமையில் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆனேன். ஆனா அங்க 40 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய் கொடுங்க என்று கேட்கிறார்கள். தினமும் வாழ்றதுக்கே கஷ்டப்பட்டு இருக்கும்போது அவ்வளவு பணத்தை என்னால எப்படி கொடுக்க முடியும். இதுவரைக்கும் மூன்று லட்சத்துக்கு மேல செலவு பண்ணிட்டேன். ஆனா என்னோட உடம்புல இருக்க பிரச்சனை எதுவுமே சரியாகவில்லை.

முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஏதாவது உதவி பண்ணா நல்லா இருக்கும். சினிமாவுல நான் இருக்கும் போது நல்லா சம்பாதித்த பணத்தில் சொந்த வீடு எல்லாமே இருந்துச்சு. ஆனா பசங்க பசங்கன்னு எல்லாத்தையும் என்னுடைய பசங்களுக்காகவே விற்று விட்டேன். எனக்குன்னு நான் எதையும் சேர்த்து வைக்கல. இப்போ என்கிட்ட எதுவுமே இல்லாம ஒரு அனாதை மாதிரி தான் தினமும் வாழ்க்கையை கழிச்சிட்டு இருக்கேன். என்னுடைய மூத்த பையன் ஹைதராபாத்தில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டான். முதலில் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது அவன் வந்து பார்த்து உதவி பண்ணா. அதுக்கப்புறம் அவன் வரவே இல்ல.
![]()
எத்தனை முறை போன் பண்ணாலும் எடுக்க மாட்டான். நான் செத்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு என்னோட பசங்க வந்துட்டாங்க. நான் சினிமாவில் நடித்த சம்பாதித்துக் கொண்டிருந்தேன். அப்போ ஒரு படத்துல நடிச்சா ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா நான் சம்பாதிச்ச பணத்தை வைத்து தான் சொந்தமா வீடு கட்டினேன். அப்போ என்னை எல்லாரும் நல்லா தான் பாத்துக்கிட்டாங்க. பிறகு என்னுடைய உடல்நிலை முடியாமல் போனது. வீட்டில் ஒரு சண்டை வந்ததும் எல்லோரும் என்னை விட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் வீட்டை விற்று விட்டேன். இப்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். இப்போ இருக்கிற வீட்டுக்கு ஒவ்வொரு மாதமும் 7 ஆயிரம் ரூபாய் வாடகை. அதைக் கூட என்னால கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கேன்.

என்னுடைய இரண்டாவது பையன்தான் என்னை பார்த்து இருக்கிறான். அவனும் சரியான வேலை இல்லாம வருமானம் இல்லாம கஷ்டப்பட்டு இருக்கான். இப்போ பணத்துக்காக நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம். கையில் பத்து பைசா கூட இல்லாம மருத்துவ உதவிக்காக நிறைய பேர் கிட்ட உதவி கேட்டுட்டேன். ஆனா யாரும் எனக்கு உதவி செய்ய முன் வரவில்லை. சில வருடத்திற்கு முன்பு நான் மருத்துவமனையில் இருந்த போது லாரன்ஸ் மற்றும் விஷால் இருவரும் என்னை வந்து பார்த்து உதவி பண்ணாங்க. அதன் பிறகு எந்த ஒரு நடிகரும் எனக்கு உதவி செய்ய வரல. இப்போ என்னோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. என் சிகிச்சை செலவுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்பட்டபோது ஒருவர் முதல்வர் ஸ்டாலின் இடம் உதவி கேட்க சொன்னாரு. அதனாலதான் அவர்கிட்ட நான் உதவி கேட்கிறேன் என்று பிந்து கோஷ் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
