“மாமா எங்க போறீங்க..?” சிறுமி பலமுறை கேட்டும்… கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..!!

By Soundarya on வைகாசி 25, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர்தான் இக்கொலையைச் செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தப்பியோட முயன்ற கார்த்திக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முக்கிய குற்றவாளியான கார்த்திக்கிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் சிறுமியை எவ்வாறு கடத்தினார் என்பது குறித்த திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். சிறுமிக்கு வழக்கமாக சாக்லேட் வாங்கித் தரும் பழக்கத்தை கார்த்திக் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார். கடந்த 21-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனது இருசக்கர வாகனத்தில் கண்ணம்பாளையம் குளக்கரை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார். தான் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்று தெரியாமல் அந்தச் சிறுமி கார்த்திக்கிடம் வழியெங்கும் கேள்வி எழுப்பியும் அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை.

   

இதற்கிடையில், சூலூர் அருகே ஒரு கடையின் முன்பு வாகனத்தை நிறுத்தி சிறுமிக்கு மேலும் சில திண்பண்டங்களை கார்த்திக் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அவரது நண்பர் மோகன்ராஜ், சிறுமியை எங்கு அழைத்துச் செல்கிறாய் எனக் கேட்டதற்கு, சாக்லேட் கேட்டதால் வாங்கித் தர வந்ததாகக் கூறி கார்த்திக் மழுப்பியுள்ளார். அதன்பின்னர், வீட்டிற்குச் செல்லாமல் தொடர்ந்து கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியை நோக்கியே கார்த்திக் வாகனத்தைச் செலுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி மீண்டும் ஏன் இங்கு செல்கிறோம் எனக் கேட்டபோதும், அதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்த ஒரு தென்னந்தோப்பிற்குள் சிறுமியை அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகத் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.