தளபதி விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில் வெளியாகியுள்ள திரைப்படம் என்பதால், விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் திரையரங்குகளைத் திருவிழா போலக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகள் எங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், இப்படத்தை சுற்றிய சுவாரசியமான பின்னணித் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இத்திரைப்படத்தின் கதை விவாதத்தின்போது நடந்த சில நெகிழ்ச்சியான சம்பவங்களை ‘உடன்பிறப்பே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் பகிர்ந்துள்ளார். வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பரமாகக் கதை விவாதம் நடக்கும் சூழலில், இயக்குநர் எச்.வினோத் முற்றிலும் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். கதை விவாதத்திற்காகத் தம்மை அழைத்துக் கொண்டு வயநாட்டில் உள்ள ஒரு மலைப்பகுதி குடிசை வீட்டிற்கு எச்.வினோத் அழைத்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு எச்.வினோத், அவரது இரண்டு உதவி இயக்குநர்கள் மற்றும் இரா.சரவணன் ஆகிய நால்வர் மட்டுமே தங்கியிருந்துள்ளனர். எளிய உணவு, எளிமையான சூழல் என ஒரு சாமியாரைப் போலத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தீவிரமான சிந்தனையுடன் வினோத் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பல நாட்கள் பேய்த்தனமாக விவாதித்து முழுமையான திருப்தி கிடைத்த ஒரு நாளில், எவ்வித ஆடம்பரமும் இன்றி நிம்மதியாகப் பாறைகளின் மேல் படுத்து உறங்கியதாக இரா.சரவணன் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
“இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளை விடச் சிறியவர்கள்” என்ற எளிமையான தத்துவத்தைச் சொல்லி, புகழையோ வெற்றியையோ தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் வாழும் எச்.வினோத் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார் என்று பாராட்டியுள்ளார். மேலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, நாட்டில் ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும் என்றும் இயக்குநர் இரா.சரவணன் வாழ்த்தியுள்ளார்.
