கேரள முதல்வர் வி.டி.சதீசனைச் சந்தித்து ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் குறித்து விவாதிக்க, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தவெக அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஸ்குமார் அடங்கிய உயர்மட்டக் குழுவை அக்டோபர் 5-ஆம் தேதி கேரளாவுக்கு அனுப்பி வைக்கிறது. தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முதல்நாளே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு மென்மையான அரசியல் அழுத்தம் கொடுத்து கேரளாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
கேரளப் பகுதியில் வீணாகச் செல்லும் ஆனைமலையாறு நீரை நல்லாறு வழியாகத் திருப்பி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணைக்குக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 8.5 முதல் 9 டி.எம்.சி நீர் திருமூர்த்தி அணைக்குக் கிடைக்கும் என்பதால், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் பல தசாப்த கால நீர்நிலைப் தேவைகள் நிறைவடையும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைப் போலவே கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டுகால நீண்டகாலக் கோரிக்கையாக இது இருந்து வருகிறது.
கடந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் இத்திட்டம் வெறும் வாக்குறுதிகளுடனும் போராட்டங்களுடனும் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களில் இத்திட்டத்தில் பெரிய நகர்வுகளை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனம் இருந்தது. இந்நிலையில், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் தவேக அரசு இத்திட்டத்தை திடீரென கையில் எடுத்துள்ளது, கொங்கு மண்டல விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பையும் அதேவேளையில் அரசியல் கணக்குகளையும் உருவாக்கியுள்ளது.
இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பை சமாளிக்கவும், அங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகக் கட்டமைப்புக்கு அப்பால் உள்ள விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கவும் விஜய் இந்த வியூகத்தை அமைத்துள்ளார். அதிமுகவின் செல்வாக்கு மண்டலமாக விளங்கும் கொங்கு பகுதியில், 60 ஆண்டுக்கால கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தில் தவெக அரசு தீவிர அக்கறை காட்டுகிறது என்ற தோற்றத்தை உருவாக்கவே இந்த உடனடி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாளை நடைபெறவுள்ள இந்த சந்திப்பை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, தேர்தல் களத்தில் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க தவெக திட்டமிட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் தேதிக்கு முந்தைய நாள் மேற்கொள்ளப்படும் இந்த உடனடி அரசியல் நகர்வும், தவெக அரசின் இந்தத் தேர்தல் வியூகமும் தாராபுரம் பகுதி விவசாயிகளிடம் எந்த அளவுக்குப் தாக்கத்தையும் வாக்கு மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியும்.
