நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான டெல்லி போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலும் மாணவர்கள் திரண்டு நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ நடைபெற்ற இப்போராட்டம், தொடக்கத்தில் மத்திய அரசுக்கும் நீட் தேர்வுக்கும் எதிரான குரல்களுடனேயே தொடங்கியது. ஆனால், களமிறங்கிய திமுக ஆதரவாளர்களின் வருகையால், போராட்டம் திடீரென தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிரான விமர்சனப் களமாக உருவெடுத்தது. தவெக-வுக்கு எதிரான முழக்கங்களும் பதாகைகளும் அங்குப் பயன்படுத்தப்பட்டது தவெக தலைமைக்கு பெரும் மன உளைச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே தங்களுக்கு எதிராகக் குரல்கள் எதிரொலித்ததை தவெக தலைமை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரிடம் பேசிய தவெக நிர்வாகிகள், நாடாளுமன்றப் பலம் இல்லாத நிலையிலும் மருத்துவச் சேர்க்கையில் 7.5% உள்ஒதுக்கீட்டை 10%-மாக உயர்த்த அரசு பாடுபட்டு வரும் சூழலில், கூட்டணி அலுவலகத்திலேயே அரசுக்கு எதிராகப் போராட்டத்தை ஊக்குவிப்பது சரியல்ல எனத் தங்கள் கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தத் தலையீடானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. தவெக அரசு தங்களைக் கேள்வி கேட்பதா என அக்கட்சியின் ஒரு சாரார் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த முடிவை எதிர்த்து வந்த கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிலர் இன்னமும் திமுகவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதும், பொதுவெளியில் தவெக அரசை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் சூழலில், முதலமைச்சர் விஜய்யும் தவெக தலைமையும் கூட்டணியில் உள்ள கட்சிகளின் நகர்வுகளையும் நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
