தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்டுள்ள 300 புதிய பேருந்துகளின் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை காமராஜர் சாலையில் கம்பீரமாக அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்த இந்தப் புதிய பேருந்துகளில் 164 டீசல் பேருந்துகளும், சுற்றுசூழலுக்கு உகந்த 136 சிஎன்ஜி பேருந்துகளும் அடங்கும். தொடக்க விழாவிற்குப் பிறகு, புதிய பேருந்துகளின் தரம் மற்றும் வசதிகளை முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, புதிய பேருந்துகளை ஆய்வு செய்த கையோடு முதலமைச்சர் விஜய் திடீரென பெரம்பூர் நோக்கிச் செல்லவிருந்த ’29 A’ தடம் எண் கொண்ட அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை பொதுமக்களோடு ஒருவராகப் பயணித்த அவர், பேருந்தில் இருந்த பயணிகளிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளையும், போக்குவரத்து வசதிகள் குறித்த கருத்துகளையும் கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த நெகிழ்ச்சியான திடீர் பயணம் பேருந்தில் இருந்த பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
