தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மின்வாரியத் துறைக்குத் தேர்வான 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பணியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலமைச்சரின் மனிதநேயமிக்க செயல் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தேர்வானவர்களில் நிறைமாத கர்ப்பிணியான அக்ஷையலட்சுமி என்ற பெண்ணிற்கு, முதலமைச்சர் விஜய் மேடையிலிருந்து கீழே இறங்கி நேரடியாகச் சென்று பணி நியமன ஆணையை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதலே, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் பிரதான விமர்சனமாக மின்வெட்டுப் பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் போன்ற வெளிவட்டச் சாலைப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். சில இடங்களில் இந்தத் தீவிர மின்வெட்டு காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் சூழலும் உருவானது. இதற்கு முந்தைய காலங்களில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது மட்டுமே நீடித்த மின்வெட்டு இருந்த நிலையில், தற்போது சாதாரண நாட்களிலேயே மின்தடை ஏற்படுவது தவெக அரசுக்கு பெரும் சவாலாக மாறியது.
இந்தத் தொடர் மின்வெட்டுப் பிரச்சனை குறித்து மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது அடுக்கடுக்கான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்தில் நிலவி வந்த ஆட்கள் பற்றாக்குறை அப்படியே தொடர்வதுதான் இதற்கு மிக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தற்போது மின்வாரியத்திற்கு உடனடியாக சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். போதிய ஆட்கள் இல்லாததால், மாதாந்திர பராமரிப்புப் பணிகளைச் சரிவர மேற்கொள்ள முடியாமல் தேக்கநிலை ஏற்பட்டது. இதுமட்டுமன்றி, கடந்த காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட தரமற்ற மின் உபகரணங்களும் இந்தத் திடீர் மின் தடைகளுக்குப் பின்னணியில் இருப்பதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்களின் அதிருப்தியையும், மின்வாரியத்தின் தற்போதைய நிலையையும் உணர்ந்த தவெக அரசு, இப்பிரச்சனைகளுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காணத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாகவே, காலிப்பணியிடங்களை வேகமாக நிரப்பும் நோக்கில் இன்று 401 உயர் அதிகாரிகளுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பொறியாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகளின் வருகையால் மின்வாரியம் இனி புதுப்பொலிவு பெறும் என்றும், மின்வெட்டுப் பிரச்சனைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், தடையற்ற மின்சாரம் கிடைத்தால் போதும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
