“ஹலோ தம்பி.. நான் பிசினஸ் மேன்”…. கேரளாவையே உலுக்கிய ‘இன்ஸ்டா’ காதலி…. 50 லட்சத்தை அமுக்கிவிட்டு 29 வயது அழகி செய்த பகீர் காரியம்….!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு மெகா திருமண மோசடி சம்பவம் தற்போது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கி எடுத்து வருகிறது. சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் எடத்தலா பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஷம்லா என்ற பெண், தனது வசீகரப் பேச்சால் இளைஞர்களை வளைத்துப்போட்டு கோடிக்கணக்கில் சுருட்டிய அதிர்ச்சி பின்னணி போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, காதல் மற்றும் தொழிலதிபர் என்ற போர்வையில் இவர் நடத்திய நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெரும்பாவூர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலமாக ஷம்லாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் தீவிர காதலாக மாறவே, அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக ஷம்லா உறுதியளித்துள்ளார். அத்துடன் நிற்காமல், தான் செய்து வரும் தொழிலில் முக்கியப் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, அதற்கு முதலீடு செய்யுமாறும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்த இளைஞர், கடந்த 2024 செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான குறுகிய காலத்திற்குள் வங்கி மற்றும் கூகுள் பே மூலமாகப் பல தவணைகளாக மொத்தம் 50 லட்சம் ரூபாயை ஷம்லாவின் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

   

பணத்தைப் பெற்றுக்கொண்ட அடுத்த கணமே ஷம்லாவின் பேச்சிலும் நடத்தையிலும் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது. சொன்னபடி திருமணம் செய்துகொள்ளாமலும், தொழிலில் சேர்க்காமலும் இழுத்தடித்ததுடன், ஒருகட்டத்தில் பணத்தைத் திரும்பக் கேட்ட இளைஞருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையிலான போலீசார் டிஜிட்டல் ஆதாரங்களுடன் ஷம்லாவை அதிரடியாகக் கைது செய்தனர். தலைமறைவாக முயன்றவரை போலீசார் மடக்கிப் பிடித்தபோதுதான், அவர் ஒரு தொடர் மோசடி பேர்வழி என்பது தெரியவந்தது.

   

கைது செய்யப்பட்ட ஷம்லாவிடம் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில், கேரளா முழுவதும் பல மாவட்டங்களில் இதே பாணியில் அவர் பல லட்சங்களைச் சுருட்டியிருப்பது அம்பலமானது. சோஷியல் மீடியா மூலம் வசதியான இளைஞர்களைக் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்துவதை வழக்கமாகக் கொண்ட இவர், கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 20 லட்சம் ரூபாயும், ஆலுவாவைச் சேர்ந்த மற்றொருவரிடம் 11 லட்சம் ரூபாயும் ஏமாற்றியுள்ளார். மலப்புறம், வயநாடு உள்ளிட்ட இடங்களிலும் இவரது மோசடிப் படலம் நீண்டுள்ளது. இளைஞர்களை ஏமாற்றிப் பறித்த பணத்தில் மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஷம்லாவின் பின்னணியில், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.