தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதிக்கு முதன்முறையாக இன்று வருகை தந்தார் முதல்வர் விஜய். தொகுதி மக்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே, புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு, பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க புதிய ‘இ-சேவை’ மையம் மற்றும் பிரத்யேக செயலி அறிமுகம் எனப் பல்வேறு மக்கள் நலப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும், தவெக அரசின் புதிய குடும்ப அட்டை விநியோகத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 10 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளையும், ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அதற்கான பொருட்களையும் அவரே முன்னின்று வழங்கினார்.
தொகுதி ஆய்வின் ஒரு பகுதியாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து சார்ஜிங் பணிமனைக்குச் சென்று முதல்வர் விஜய் பார்வையிட்டார். அப்போது அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த நெகிழ்ச்சியான தருணத்தில், அங்கிருந்த பெண் பணியாளர் ஒருவர் முதல்வருக்குக் கை குலுக்கத் தன் கையை நீட்டினார். ஆனால், முதல்வர் விஜய் அவருக்குக் கை கொடுக்காமல் தவிர்த்துவிட்டதாகக் கூறி, அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இந்த வீடியோவை மையமாக வைத்து, சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். “சினிமா நட்சத்திரங்களோ அல்லது பெரும் தொழிலதிபர்களோ கை நீட்டியிருந்தால் இந்நேரம் முதல்வர் கை குலுக்கியிருப்பார், ஆனால் சாதாரண உழைக்கும் வர்க்கத்துப் பெண் தொழிலாளர் கை நீட்டியபோது ஏன் இந்தத் தயக்கம்?” என்று கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தொகுதிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல்வரின் இந்த முதல் அதிகாரப்பூர்வப் பயணம், இந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
