வாடகை கட்டிடத்தில் இயங்கும் முதலமைச்சர் அலுவலகம்?…. இடம் மாற இதுதான் காரணமா?…. வெளிவந்த பகீர் உண்மை…!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் அறிவொளி நகரில், கடந்த 1994-ஆம் ஆண்டு தொடர் போராட்டங்களின் விளைவாக ஏழை விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் 124 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், பட்டா வழங்கப்பட்டு 32 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதிகாரிகள் நிலத்தை அளந்து அத்து காண்பிக்காததால் பயனாளிகள் அங்கு குடியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நிலத்தைக் கையளிக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போராட்டம், ஈட்டிவீரம்பாளையம் கூட்டுறவு சங்க சந்திப்பிலிருந்து பேரணியாகத் தொடங்கியது. பேரணியை பெருமாநல்லூர் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து மறித்ததால் பெரும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தடைகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த விவகாரத்தில் 6 வாரங்களுக்குள் நிலத்தை அளந்து ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் அதைச் செயல்படுத்தவில்லை என்றும், நிலத்தைக் காட்டாமலேயே நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டி பட்டாக்களை ரத்து செய்ய வட்டாட்சியர் முயல்வது சட்டவிரோதமானது என்றும் சண்முகம் குற்றம்சாட்டினார்.

   

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு பட்டா ரத்து நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், புதிதாக மனு அளித்துள்ள 60 பேருக்கும் சேர்த்து நிலத்தை அளந்து ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். மேலும், 1949 முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட பட்டாக்களில் நிலம் ஒப்படைக்கப்படாத நிலை குறித்து அரசு மாநில அளவிலான ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதோடு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மக்கள் தொகை காரணத்தைக் கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியது கண்டனத்திற்குரியது என்றும், தொழில்துறை நகரமான கோவையின் உரிமையை பெற தமிழக அரசு தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

   

மேலும் பல்வேறு நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், நீட் தேர்வு சார்ந்த சீர்திருத்தக் குழுவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார். முதலமைச்சர் அலுவலக மாற்றம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தவர், “முதலமைச்சர் அலுவலகம் ஏற்கனவே வாடகைச் சட்டக் கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது; தற்போது அரசுக்குச் சொந்தமான தலைமைச் செயலகத்தின் 10 மாடி கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன” என்று விளக்கமளித்தார். காவிரி விவகாரத்தில் முதலமைச்சரின் கர்நாடகப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே கட்சியின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.