தமிழக சட்டப்பேரவை மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், திமுக அரசின் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் எவ்விதத் தலையீடும் இருக்கக் கூடாது என்று தாம் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்த அவர், குற்றவாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது சமமாக நடவடிக்கை எடுக்கப்படுவதே இந்த அரசின் முதன்மை நிலைப்பாடு என்று உறுதியாகத் தெரிவித்தார்.
திமுகவின் ஊழல் வரலாற்றைக் குறிப்பிட்ட முதல்வர், 1970-ல் வீராணம் திட்டத்திற்காக சத்யநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்கக் கமிஷன் கேட்கப்பட்டதை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறினார். அன்றைய முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் மாறன் இரண்டரை சதவீதக் கமிஷன் கேட்டதாகச் சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆதாரம் கேட்பவர்கள் சட்டமன்ற நூலகத்திலிருக்கும் 60 ஆண்டுகள் பழமையான புத்தகங்களைப் போய் பார்க்குமாறு சவால் விடுத்தார். மேலும், ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் திமுக ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறையே 100 பக்க ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது என்றும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் சாடினார்.
திமுகவினர் விடுத்த சவாலை ஏற்றுப் பேசுகையில், “3 கோப்புகளை வெளியிட வேண்டும் என்று திமுக சவால் விட்ட நிலையில், தற்போது சாம்பிளுக்கு 2 துறை ஃபைல்களை மட்டுமே ஓபன் செய்துள்ளோம். அதற்கே திமுக அரண்டு போயுள்ளது” எனக் கூறித் தம் கையால் ஆவேசமாகச் சைகை செய்து காட்டினார். “2 துறை ஃபைல்களுக்கே இப்படி என்றால், மற்ற துறைகளின் ஃபைல்களை வெளியிட்டால் இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்பி வருமோ தெரியவில்லை” எனக் குறிப்பிட்ட அவர், திமுகவினர் தொடர்ந்து கேட்டுவந்த ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி “ஆதாரம் போதுமா? போதுமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் பேரவையையே அதிர வைத்தார்.
திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாகச் விமர்சித்துத் தமது உரையை நிறைவு செய்த முதல்வர் விஜய், “திமுக எதைச் செய்தாலும் குடும்பத்தோடுதான் செய்வார்கள்; கட்சி நிதியைக் கூடச் சேர்ந்துதான் வாங்கியுள்ளனர்” என்று சாடினார். “தவறு நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும்; திமுக இருக்கும் இடத்தில்தான் தவறுகளே நடக்கும்” என்று ஆவேசமாகப் பிரகடனம் செய்த அவரது இந்தச் சட்டமன்ற உரை, ஆளுங்கட்சி மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
