“விஜய்யின் திடீர் அதிரடி”… அதிகாலை 7 மணிக்கே அதிகாரிகளுக்கு விழுந்த சாட்டையடி உத்தரவு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி 16 கட்டளைகள்….!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தவும் முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 16 அம்சங்கள் அடங்கிய முக்கிய சுற்றறிக்கையை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது. நகர்ப்புற மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது, தூய்மையைப் பராமரிப்பது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை வலுப்படுத்துவது ஆகியவையே இந்த அதிரடி நடவடிக்கையின் முதன்மை நோக்கங்களாகும்.

   

இந்த புதிய உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி ஆணையர், இணை ஆணையர்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் தினமும் காலை 7 மணிக்கு முன்பாகவே களத்திற்குச் சென்று தூய்மைப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு முன்பாகவே சாலைகளை கூட்டிப் பெருக்கி தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள், பொதுக் கழிப்பிடங்கள் ஆகியவற்றை உயர் அதிகாரிகள் தினமும் நேரில் ஆய்வு செய்து தடையற்ற தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் பொதுச் சுவர்களில் கண்டபடி போஸ்டர்கள் ஒட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பிரத்யேக இடங்களில் மட்டுமே போஸ்டர் ஒட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

   

பொதுமக்களின் முக்கிய தேவைகளான தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கட்டிட அனுமதி போன்ற சேவைகளிலும் இந்த சுற்றறிக்கை பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, எரியாத தெருவிளக்குகள் குறித்த புகார் வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் பழுது நீக்கம் செய்யப்பட வேண்டும். அதேபோல், கட்டிடத் திட்ட அனுமதிகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது என்றும், வேண்டுமென்றே தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை வலுப்படுத்த சொத்து வரி மற்றும் தொழில் வரி நிலுவைகளை வசூலிக்க வாராந்திரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வருவாய் வசூல் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

 

சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், நகரப் பகுதிகளில் பசுமையை அதிகரிக்க ஒதுக்கப்பட்ட திறந்தவெளி நிலங்கள் (OSR) மற்றும் நீர்நிலைகளைச் சுற்றி நிறுவனங்களின் CSR நிதியைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் நடப்படும் மரக்கன்றுகள் கால்நடைகளால் சேதமடையாமல் இருக்க குறைந்தது 5 அடி உயரமுள்ள கன்றுகளை நடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன், தெருநாய்கள் கட்டுப்பாடு, வெறிநாய் கடி தடுப்பூசி திட்டம், ஊழியர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைப்படுத்துதல், சாலைகளின் தரப் பரிசோதனை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் பெரிதும் மேம்படும் என பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.