தமிழ்நாட்டில் மே 13 முதல் இன்று வரை பல்வேறு அரசுத் துறைகளால் வெளியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை (Short-term tenders) மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் வெளியிடப்பட்ட இந்த டெண்டர்கள் அனைத்தும் “நிர்வாக காரணங்களுக்காக” ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் அவசரத்தன்மையைக் காரணம் காட்டி இதுபோன்ற குறுகிய கால டெண்டர்களை மேற்கொள்ளக் கூடாது என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாக, டெண்டர் ஒதுக்கீட்டு விவகாரங்களில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இரண்டு அரசு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும், முறையான விதிகளையும் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
