மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் கறுப்புக்கொடி ஏற்றியதோடு மட்டுமல்லாமல், சர்ச்சைக்குரிய மசோதாவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தி தனது ஆக்ரோஷமான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது எனச் சாடிய முதல்வர், சென்னை அண்ணா அறிவாலயம் மற்றும் தனது இல்லத்திலும் கறுப்புக்கொடிகளை ஏற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் இப்போராட்டத்தில் இணையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக முதல்வர் விமர்சித்துள்ளார். “அண்டை மாநிலத் தலைவர்கள் கூட அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுக்கும் சூழலில், பழனிசாமி டெல்லியின் அடிமையாகக் கோழைத்தனமாக இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தைரியமிருந்தால் ஒருமுறை பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசும்படி சவால் விடுத்துள்ளார். மேலும், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் ‘நியூ டெல்லி அலையன்ஸ்’ (NDA) கூட்டணிக்கு வருகிற ஏப்ரல் 23 வாக்குப்பதிவில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், அதற்கான ஒத்திகையே இந்த கறுப்புக்கொடிப் போராட்டம் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை அமலுக்கு வந்தால், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பலம் கணிசமாகக் குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படுவதாக முதல்வர் சுட்டிக்காட்டுகிறார். புள்ளிவிவரங்களின்படி, இந்தி பேசும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 48% ஆக உயரும் நிலையில், தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைய வாய்ப்புள்ளது. “மக்கள் தொகையைக் குறைத்தது குற்றமா? திட்டமிட்டுத் தெற்கின் உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு” என்பதே இந்தத் தீவிரப் போராட்டத்தின் மையக்கருத்தாக அமைந்துள்ளது.
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது, கடிதம் எழுதுவது போன்ற வழக்கமான முறைகளைத் தாண்டி, முதலமைச்சர் மசோதா நகலை எரித்தது திமுக தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில உரிமைகளைக் காப்பதற்கான இந்த ‘போர் முரசு’ டெல்லி வரை எதிரொலிக்கும் என்றும், மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அளவில் போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் பற்றியுள்ள இந்த எதிர்ப்புத் தீ, மத்திய அரசைப் பணிய வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும்… pic.twitter.com/aSsOLN7K6J
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026
