உதயநிதி கொடுத்த ரிப்போர்ட்.. ஸ்டாலின் காட்டிய சிக்னல்… அறிவாலயத்தில் நடந்த நள்ளிரவு பஞ்சாயத்து… யார் யாருக்கெல்லாம் கல்தா?…!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக-விற்குள் நிலவும் ‘உள்ளடி’ விவகாரங்கள் தற்பொழுது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் திமுக வேட்பாளர்களில் பலர் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்களாகவும், வருங்கால திமுக முகங்களாகவும் களமிறக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்பொழுது அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மூத்த நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என்றும், இறுதிக்கட்டப் பரப்புரையின்போது திட்டமிட்டு ஒதுங்கியிருந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இளம் வேட்பாளர்களின் வருகை சில மூத்த அமைச்சர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதே இதற்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் உதயநிதி ஸ்டாலின் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்குச் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட வேட்பாளர்களை அவர் நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

   

அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, அமைச்சர்கள் அன்பரசன், ஆவடி நாசர் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் மீது வேட்பாளர்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் சில முக்கிய புள்ளிகள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியது குறித்தும், உள்ளூர் அளவில் ஒத்துழைப்பு வழங்காதது குறித்தும் ஸ்டாலின் விரிவாகக் கேட்டறிந்தார். இந்த உள்ளடி வேலைகளால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

   

85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் வருகை மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வியூகங்களுக்கு மத்தியில், திமுக-விற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் உடன்பிறப்புகளிடையே நிலவுகிறது. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமையுமா அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.