திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா கட்டி வரும் உலகின் மிகப்பெரிய அணையான ‘மெடோக்’ (Medog), இந்திய எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு “டைம் பாம்” என ஆய்வாளர்களால் எச்சரிக்கப்படுகிறது. சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 60,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் உருவாக்கப்படும் இந்த அணை, தற்போது உலகின் மிகப்பெரிய அணையாக இருக்கும் ‘திரீ கோர்ஜஸ்’ அணையை விட மூன்று மடங்கு பெரியதாகும். வழக்கமாக சீனப் பொருட்களுக்கு உத்திரவாதம் இல்லை என்ற பொதுவான விமர்சனம் ஒருபுறமிருக்க, இந்த பிரம்மாண்ட அணை எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடிய அபாயத்தில் இருப்பதுதான் தற்போதைய ஒட்டுமொத்த கவலைக்கும் காரணமாக மாறியுள்ளது.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் அமையவிருக்கும் இந்த அணை, மிகத்தீவிரமான நிலநடுக்க மண்டலத்தில் (Seismic Zone) கட்டப்பட்டு வருகிறது. இதனை இந்திய ஊடகங்கள் மட்டும் கூறவில்லை; மாறாக, சீன புவியியல் மையத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையே அதிர்ச்சிகரமான இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அணைக்குக் கீழே ‘பைஜன்’ (Paijan) எனப்படும் எப்போது வேண்டுமானாலும் நகரக்கூடிய, செயல்படும் நிலத்தடி பிளவு (Active Fault Line) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு எந்த நேரத்திலும் நிலநடுக்கமோ அல்லது பயங்கர நிலச்சரிவோ ஏற்பட்டு அணை உடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன.
இந்த அணை உடைந்தால், அது இந்தியாவின் நீர் மேலாண்மை மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பிற்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் விஷயம் நாம் நினைப்பதை விட மிகத் தீவிரமானது. பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டத்தை சீனா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்கனவே இந்தியாவுக்கு இருந்த நிலையில், இந்த நிலநடுக்க அபாயம் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த பேராபத்தைத் தடுக்க வேண்டுமெனில், அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்; அது முடியாத பட்சத்தில், அணையின் சரிவுகளைப் பலப்படுத்தவும், கூடுதல் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
