தர்மபுரி மாவட்டம் அடுத்த செம்மண அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான கார்த்திக் (28) என்பவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 6 மற்றும் நான்கு வயதில் இரண்டு மகள்களும், ஒன்றரை வயதில் சிவரத்தீஸ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று காலை கார்த்தி அவருடைய மனைவி மற்றும் மாமியார் கூலி வேலைக்கு அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்று விட்ட நிலையில் மூன்று குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளன. செங்கல் சூளை அருகே இரண்டு சிறுமிகளும், தங்கள் தம்பியுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒன்றரை வயது குழந்தை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.
இதனைப் பார்த்த கார்த்திக் அவருடைய மனைவி மற்றும் மாமியார் விரைந்து வந்து குழந்தையை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
