ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட நள்ளிரவு உத்தரவு… பெண்கள் பாதுகாப்பில் சமரசமே கிடையாது…!

By SATHISH R on ஆனி 30, 2026

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் விஜய், அரசு அதிகாரிகளுக்குப் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். லஞ்ச லாவண்யமற்ற, வெளிப்படையான சமூக நீதிக்கான அரசை மக்கள் எதிர்பார்த்துத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் மற்றும் சாலை வசதி போன்ற பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகாரிகள் தங்களின் முக்கியக் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க வரும்போது, மனுக்களைப் பெற்றுக்கொள்வதோடு நின்றுவிடாமல், அவர்களின் தேவைகளைத் தன் வீட்டு மனிதர்களின் தேவையாகக் கருதி கனிவோடு தீர்த்து வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் அதிகாரிகள் காலை வேளையில் நேரடியாகக் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்படும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யத் தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

   

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பைப் பொறுத்தவரை, தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி துரித நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், இதில் நிரபராதிகள் யாரும் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்றும் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாகத் தெரிவித்தார். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாகவே, வருவாய்த்துறையும் காவல்துறையும் ஒருங்கிணைந்து அதன் மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றங்களைத் தடுக்க முன்கூட்டியே கணித்துச் செயல்பட வேண்டும் என்று சட்டம்-ஒழுங்கு கூட்டத்தில் அவர் அறிவுறுத்தினார்.

   

அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அதிகாரிகள் 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்றும் முதலமைச்சர் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்காக, பள்ளிக்கு அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து சோதனை நடத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.