அதிர்ச்சி… குடிநீர் கேட்டு மறித்த மக்கள்… முகத்தில் அடித்தாற்போல் ஒரு பாட்டில் தண்ணீரைக் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ… நெடிசோன்கள் கொந்தளிப்பு…!!

By Swetha on ஆனி 30, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தின் பிச்சோர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பிரிதம் சிங் லோதி, தனது தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அப்பகுதி கிராம மக்கள், குறிப்பாகப் பெண்கள், அவரது வாகன அணியை வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, மோசமான சாலைகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து அவரிடம் கடும் அத்திருப்தியை வெளிப்படுத்தினர்.

கிராம மக்கள் தங்களின் குறைகளைக் கூறிக்கொண்டிருந்தபோதே, எம்.எல்.ஏ பிரிதம் லோதி அதற்குத் தகுந்த தீர்வையோ அல்லது உறுதியையோ அளிக்காமல், நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துத் தனது காரில் இருந்த ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர்களிடம் நீட்டினார். “இந்தாங்க, தண்ணி குடிங்க” என்று கூறியவாறு அந்தப் பாட்டிலைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மக்கள் குடிநீருக்காகத் தவித்து வரும் வேளையில், பொறுப்பான மக்கள் பிரதிநிதியான அவரின் இந்த அலட்சியமான செயல் அங்கிருந்தோரை அதிர்ச்சியடைய வைத்தது.

   

இந்த நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பாக மேடைகளில் பேசும்போது சினிமா பாணியில் தனக்கு “250 கிலோ கை” இருப்பதாக வீரம் பேசியவர், மக்கள் தங்களின் உரிமைகளைக் கேட்டபோது வெறும் ஒரு பாட்டில் தண்ணீரை மட்டுமே கொடுத்து ஏமாற்றியுள்ளார் எனப் பயனர் பலர் விமர்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரஸும் இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி பாஜக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துள்ள நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவே தான் தினசரி உழைத்து வருவதாகவும் எம்.எல்.ஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.