தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத, அரசுப் பொறுப்பில் இல்லாத இரண்டு தனிநபர்கள் சட்டவிரோதமாகப் பங்கேற்றதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாராயணன் திருப்பதி மற்றும் அரவிந்த் மேனன் ஆகியோர் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து அதிரடியாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிநபர்கள் கலந்துகொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இது அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியைக் கடுமையாக மீறும் செயல் என்றும் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற விதிமீறல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த இரண்டு நபர்கள் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி என்பது தெரியவந்துள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் இவர்கள் இருவரும் அவருடனேயே இருந்து வரும் போதிலும், இவர்களுக்கு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அரசுப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. இதனால், அரசுப் பதவியில் இல்லாத தனிநபர்கள் எப்படி ரகசிய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீதான குற்றச்சாட்டு குறித்தும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என இச்சந்திப்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
