தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் “வருகையில்லா ஆவணப்பதிவு” எனும் புதிய இணையவழி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் மூலம் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகிய ஆவணங்களை, பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணையவழியில் கட்டாயமாகப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் பதிவு செய்யும் வசதி பொதுமக்களுக்குக் கிடைக்கிறது.
இச்சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது சொந்த உள்நுழைவை (User Login) உருவாக்கி ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். ஆவணத்தை எழுதுபவர்கள், பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரின் ஆதார் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் மூலமாக UIDAI அமைப்பினால் சரிபார்க்கப்படும். இத்தொழில்நுட்பப் பணிகளுக்கு இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட L1 விரல் ரேகை/கருவிழி ஸ்கேனர் சாதனம், வெப்கேம் மற்றும் நீலநிறப் பின்னணித் திரை ஆகியவை தேவைப்படும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து பதிவு செய்யவோ, திருத்தத்திற்காகத் திருப்பியனுப்பவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். திருத்தத்திற்கு அனுப்பப்படும் ஆவணங்களை 30 நாட்களுக்குள் மீண்டும் சமர்ப்பிக்கலாம். பதிவு செய்யப்பட்டவுடன் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு பயனர் கணக்கில் பதிவேற்றுவார். அதனைப் பயனர்கள் 60 நாட்களுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; 60 நாட்களுக்குப் பிறகு வழக்கமான முறையில் சான்றிட்ட நகலுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
போலி ஆவண உருவாக்கத்தைத் தடுக்கப் பல்வேறு நவீனப் பாதுகாப்பு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆவணத்தின் பதிவுச் சான்றுரை ஒவ்வொரு முறையும் மாறும் ஐந்து வண்ணக் கலவையில் (Dynamic Random Five Colours) அச்சிடப்படும். மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் ஆவண எண், தேதி அடங்கிய QR குறியீடு இடம்பெறும். டிஜிட்டல் கையொப்பமிட்ட ஆவணத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் “X” குறியீடு தோன்றி முறைகேட்டைக் காட்டிக் கொடுத்துவிடும். பொதுமக்கள் மற்றும் மனை வணிகர்களின் நலன் கருதி இப்புதிய கட்டாயப் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
