“நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அவர், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணி செய்ய மட்டுமே தெரியுமே தவிர, மக்கள் பணத்தை சுருட்டத் தெரியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தங்களுக்குப் புதிய பணியிடங்களை உருவாக்கத் தெரியுமே தவிர, அதனை விற்கத் தெரியாது என்றும் அவர் தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே எதிர்க்கட்சியினருக்குக் கண்ணைக் கட்டுகிறது என்று சாடினார். தங்களுக்குத் தங்கத்தை உருக்கி தாரை வார்க்கத் தெரியாது என்று குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சி மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து உரையாற்றினார். முதலமைச்சரின் இந்த அதிரடியான மற்றும் காட்டமான பதில் பேச்சு, தற்போதைய அரசியல் வட்டாரத்திலும் சட்டப்பேரவையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
