தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் உள்ள ‘வெல்லும் பெண்கள்’ நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.
இதனால், இத்திட்டத்தின் மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இலவசத் திட்டங்களை எதிர்த்தவர்கள் கூட இப்போது தாங்கள் ஆளும் மாநிலங்களில் இவற்றைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
மேலும், தனது திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களுக்குக் கல்வி எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், பெண்களின் வளர்ச்சிக்காகவே புதுமைப் பெண் மற்றும் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
பேச்சின் முடிவில், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும், மகளிர் உரிமைத் தொகையும் உயரும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதைச் சுட்டிக்காட்டி, திட்டப் பயனாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
