தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலைமை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளாராம். சில மாவட்டங்களில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளை தீர்க்கவும் பொறுப்பு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையில் சிக்கினால் உடனடியாக அவர்களை நீக்கி விடுவேன் என்றும் முதல்வர் வார்னிங் கொடுத்துள்ளார்.
