ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தனது தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சராகத் தான் பதவியேற்றிருக்க வேண்டியது என்றும், அன்றைய இரவு வரை தனக்கே வாய்ப்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் வந்து அந்தப் பதவியைப் பறித்துக்கொண்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வளர்ச்சியை விமர்சித்த செங்கோட்டையன், அவர் முதலமைச்சர் பதவியைப் பெற சசிகலாவின் காலில் “மலைப்பாம்பு” போல ஊர்ந்து சென்று கெஞ்சியதாகக் கிண்டல் செய்தார். பதவி கிடைத்தவுடன் தனக்கு உதவிய சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைவரையும் எடப்பாடி ஏமாற்றிவிட்டதாகத் துரோகப் பட்டியலை வாசித்தார். அதிமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்களையும், பத்து முறை தோல்வியைத் தழுவிய பழனிசாமி மீண்டும் தோற்கப் போவது உறுதி என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
தன்னுடைய உரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கிய செங்கோட்டையன், விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், மணப்பெண்களுக்குத் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை, அனைவருக்கும் இலவச வீட்டு வசதி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அவர் முன்வைத்தார். அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, ஊழல் பணத்தை வைத்து மற்ற கட்சிகள் ஓட்டுக்கு ரூ.8,000 வரை கொடுக்க முன்வருவார்கள் என்றும், மக்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் போது மட்டும் “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நடக்கும் ஊழலைத் தடுத்தாலே, மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்கிற விஜய்யின் கருத்தை வலியுறுத்தி, நேர்மையான மாற்றத்திற்காகத் தவெக-விற்கு ஆதரவு கோரி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
