தமிழ் சினிமாவின் கதை சொல்லல் முறையில் முத்திரை பதித்த திரைப்படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். அதுவரை இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் சேரன் அந்த படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அவரோடு அந்த படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா மற்றும் கனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க செல்லும் சேரன், அவர் வாழ்வில் கடந்து வந்த நபர்களை சந்திப்பதே இந்த படத்தின் கதை. அதில் மையக் கதபாத்திரத்தின் பள்ளிப் பருவ காதல் மற்றும் கல்லூரி கால காதல் என கடக்கும் கதை, அதில் தோல்வியடையும் அந்த மனிதன் எப்படி தன்னுடைய வீழ்ச்சிகளில் இருந்து மீள்கிறான் என்பதே கதை.
இந்த கதை விஜய், பிரபுதேவா மற்றும் அரவிந்த்சுவாமி எனப் பலருக்கு சொல்லப்பட்டு நடக்காமல் பின்னர்தான் இயக்குனர் சேரனே நடிக்கும் முடிவை எடுத்துள்ளார். முதலில் இந்த படத்தின் கதையை சேரன் விஜய்க்கு சொல்லியுள்ளார். கதை பிடித்ததால் விஜய் நடிப்பதாக சொல்லியுள்ளார்.
ஆனால் இயக்குனர் சேரனின் பிடிவாதக் குணத்தால் அவர் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அப்போது விஜய் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் இந்த படத்துக்கு மாதத்துக்கு 10 நாட்கள் வீதம் என கால்ஷீட் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை சேரன் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி பல ஆண்டுகள் கழித்துப் பேசியுள்ள இயக்குனர் சேரன் “நான் என் திரை வாழ்க்கையில் செய்த சில தவறுகளில் விஜய் படத்தை மிஸ் செய்தது முக்கியமானது. நான் சொன்ன கதையைக் கேட்டு தயாரிப்பாளர் அப்பச்சன் சாருக்காக அந்த படத்தைப் பண்ண அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.
கதையை நாம் எவ்வளவு நேரம் சொன்னாலும் விஜய் அங்கிங்கு நகராமல் முழுவதுமாகக் கேட்பார்,. எந்த குறுக்கீடும் இல்லாமல் ஃபோகஸாக கேட்பார். இந்த குணத்தை நான் சிவாஜி சாரிடம் பார்த்திருக்கிறேன், அவரிடம் நான் தேசிய கீதம் கதையை சொன்னபோது அவரும் இப்படிதான் கேட்டார்” எனக் கூறியுள்ளார்.